சென்னை: தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு விரைவில் கிடைக்கும் என அதிமுகவின்  ஒற்றைத் தலைமை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அதே வேளையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார்மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக நேற்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதுபோல, ஒற்றை தலைமை குறித்து ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, ஒற்றைத் தலைமை குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனயிக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை உள்பட பல இடங்களில் ஒற்றை தலைமை வேண்டும் என அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதையடுத்து, எடப்பாடி ஆதரவாளர்களும், அவரது தலைமை வேண்டும் என்றும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் போஸ்டர் யுத்தம் நடைபெறு வருகிறது.

சேலம் மாவட்டம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.  அதிமுகவை முழுமையாக கைப்பற்ற கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளதாக பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதை முறியடிக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதற்கு போட்டியாக களமிறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், சேலம் மாவட்டம் முழுவதும் ஆதரவு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென பலர் வலியுறுத்த பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு இபிஎஸ் தூபம் போட்டார். இதற்கு இபிஎஸ் ஆதரவாளர்களான தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்க; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி குறித்த சட்ட திருத்தம் ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீக்கப்பட்டு விட்டதால், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம் தெரிவித்துளளார்.

இந்த பரபரப்பான சூழலில்தான்  வரும் 23ஆம் தேதி வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது. இந்த  பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இருவரும், தங்களது ஆதரவை நிலைநாட்டும் வகையில், தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர்  செய்தியாளர்களை சந்தித் ஜெயக்குமார்,  “அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் என்றவர், ஆலோசனை கூட்டத்துக்கு  ஓபிஎஸ் வருவதால் ஆலோசனை கூட்டத்தை விட்டு வெளியே வரவில்லை என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றவர், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கோரிக்கை செயல்வடிவம் பெ லாம் பெறாமலும் போகலாம்” என்றார்.

முன்னதாக ஜெயக்குமார் குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், பேசும்போது,  “அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயக்குமாரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அவர் கூட்டத்தில் நடந்ததை பற்றி ஊடகங்களிடம் பேசியதே தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கி ணைப்பாளர் தலைமையில் சீராக செயல்பட்டு வருகிறது. கட்சியை அழிக்க யார் நினைத்தாலும் ஓ.பி.எஸ் விடமாட்டார்” என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  “தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என  பதிலளித்தார்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் காரின் மீது தாக்குதல் நடத்தினர்.

பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்துவிட்டு ஜெயக்குமார் புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து  வெளிப்படையாக பேசிட முடியாது என்றவர்,  பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன்,  அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, கட்சி நகமும் சதையும் போல் உள்ளது என்றவர்,  திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும், கட்சியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு. ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், வைத்திலிங்கம், செம்மலை, பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.பி.உதயக்குமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட் டோர் பங்குகொண்டனர். ஜெயக்குமார் உள்பட சிலர் வெளியேறினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு விரைவில் கிடைக்கும் என்றும் கூறினார்.

இந்த பரபரப்பான சூழலில், சசிகலா தனது ஆதரவாளர்களை தி.நகர் இல்லத்துக்கு அழைத்து 12 மணியளவில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.