புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், மேரி கோம் எந்தப் போட்டியிலும் பங்கேற்காமலேயே தேர்வுசெய்யப்பட்டு, இந்தியாவின் இளம் வீராங்கணையான நிகாத் ஸரீன் நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்து அந்த இளம் வீராங்கணை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இவர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர். மேலும், கடந்த 2011ம் ஆண்டு உலக ஜுனியர் சாம்பியன் பட்டத்தையும், 2015ம் ஆண்டு தேசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றவர்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் தேர்வுக் கமிட்டி தலைவர் ராஜேஷ் பண்டாரி ஆகியோருக்கு இவர் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

“தான் மிகவும் இளைய வீராங்கணையாக இருப்பதால், எதிர்கால நலன் கருதி தற்போது தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட காரணத்தை நிராகரித்துள்ள இவர், கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டபோது குறுக்கிடாத வயது, இந்த 2019ம் ஆண்டில் எப்படி குறுக்கிட முடியும்? என்று கேள்வியெழுப்பிள்ளார்.

மேரி கோமுடன் மோதும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட வீராங்கணைக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் இந்த ஆந்திர வீராங்கணை.