சென்னை,
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று மதியம் 1.30 மணி அளவில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சின்னமும், கட்சியும் இருந்தால் மட்டும் போதாது தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்களே உண்மை யான அதிமுக என்றும், ஆட்சியாளர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவுக்கு ரத்தமும் சதையும் உயிருமாய் இருக்கின்ற தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளார்கள் என்றும், துரோக வரலாற்றில் துரோகத்திற்கு என்றைக்கும் வெற்றி கிடைத்ததில்லை என்றும் அதிரடியாக கூறினார்.
சசிகலா தலைமையிலான இயக்கமே உண்மையான அதிமுக என்ற டிடிவி, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பையே வழங்கி உள்ளார்கள்,என்னை தொண்டர்கள் வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்றார்.
மேலும் செய்தியார்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பிய அவர், 5, 6 பேரின் கூடா நட்பு கேடாய் முடிந்து விட்டதாகவும் கூறினார்.
மேலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளி வருவார்கள் என்று கூறிய டிடிவி, 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று ஜனவரி இறுதிக்குள் தீர்ப்பு வரும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.