டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். அந்த முகவரி, வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியாகும்.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் 2019ம் ஆண்டு நவ. 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது.
மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. அதனை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறக்கட்டளை சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். நீதிமன்றம் உத்தரவிட்டபடி சன்னி வக்ப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்த அறக்கட்டளையானது கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைந்துள்ளது. ஆர் – 20, கிரேட்டர் கைலாஷ் – 1, புதுடெல்லி என்பது அதன் முகவரியாகும். இந்த அலுவலகம் மூத்த மற்றும் பிரபல வழக்கறிஞரான பராசரனின் அலுவலகமாகும். இவர் அயோத்தி வழக்கில் இந்துக்களின் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடியவர்.