திருவனந்தபுரம்: கேரளாவில் பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டி 4ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அனைவரும் அதிசயிக்க வைத்திருக்கிறார்.

கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வழியாக, ஏராளமான முதியோர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கொல்லம் பகுதியை சேர்ந்த பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டிக்கு ஒரு புதிய சாதனை படைத்து இருக்கிறார். அவர் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கிறார். அதுவும் 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.

அவர் இந்த வயதில் கல்வி பயில்கிறார் என்பதற்கு பல பின்னணியும், முயற்சியும் இருந்திருக்கின்றன. 9  வயதாக இருக்கும்போது குடும்ப சூழ்நிலை காரணமாக 3வது வகுப்புடன் படிப்பை ைகவிட்டார். தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை.

ஆனாலும் அவரது கல்வி தாகம் மட்டும் நிற்கவில்லை. படிக்க வேண்டும் என்ற தாகம் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் அவரின் விருப்பத்தை அறிந்த கொல்லம் மாவட்ட எழுத்தறிவு திட்ட அதிகாரிகள்  பாகீரதியம்மாவுக்கு கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

கடந்த 17ம் தேதி முதல் 4ம் வகுப்பிற்கு தேர்வு நடத்தப்பட்டது. பாகீரதி அம்மாள் உற்சாகமாக கலந்துகொண்டு தேர்வு ஏழுதினார். உலகிலேயே 105 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதியது பாகீரதியம்மாள் தான்.

தேர்வு முடிவுகள் வெளியாகின. அவர் 74.5 சதவீதம் மதிப்பெண் பெற்று உள்ளார். கணிதத்தில் 75க்கு 75 என முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 30, மலையாளத்தில் 50 மதிப்பெண்கள் எடுத்தும் அசத்தி இருக்கிறார்.

அவர் தேர்ச்சி பெற்றதை அறிந்த, கேரள எழுத்தறிவு மிஷனின் இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா, த்ரிக்காருவ பஞ்சாயத்து, பிரக்குளத்தில் உள்ள பாகீரதியின் வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்தினார்.

பாகீரதியம்மாவிற்கு 6 குழந்தைகளும் 16 பேர குழந்தைகளும் உள்ளனர். இவரது இளைய மகள் தங்கமணி அம்மாள் (67) உடன் தற்போது வசித்து வருகிறார். பாகிரதியம்மாவின் மூத்த மகன் துளசிதரனுக்கு தற்போது 84 வயதாகிறது.