வாஷிங்டன்,
சர்ச்சைக்குரிய ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த திமுக பெரிதும் முயற்சி செய்து வந்தது. ஆனால், அதற்கு அதிமுக, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.
இதற்கு காரணமாக, கடலுக்குள் உள்ள ராமர் பாலம் சேதம் மடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பாலம் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்தில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு மண் திட்டுக்கள் காணப்படுகிறது.
இதையே ராமர் பாலம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஒரு தரப்பினர், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு செய்தனர்.
ராமர் பாலம் என கூறப்படும் இடத்தில் உள்ள மண் திட்டுக்கள் மற்றும் செயற்கை கோள் புகைப்படங்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். இதில் அந்த மண் திட்டடானது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது:-
ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான்.
இநத சுண்ணாம்பு பாறைகள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. மிகவும் பழமையானது என்று கூறினார்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து, டிஸ்கவரி கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விஞ்ஞான சேனலில் முன்னோட்டம் நேற்று ஒளிபரப்பப்பட்டது.
இதன் காரணமாக இந்தியாவில் ராமர் பாலம் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.