மாண்டியா: கர்நாடக மாநிலத்தில் ராகுலின் இன்றைய யாத்திரையில், கடந்த 2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல பெண் பத்திரிகையாளர்  கவுரி லங்கேஷ் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 8வது நாளாக மாண்டியா மாவட்டப் பகுதியில்  நடை பயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. நேற்று நடைபெற்ற  ஒற்றுமை நடைபயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று சிறிது தூரம் நடைபயணம் சென்றார்.

இந்த நிலையில்,  இன்று கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் யாத்திரையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையின்  ஆசிரியரான கௌரி லங்கேஷ் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

கடந்த, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து கௌரி லங்கேஷ் தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் சுடப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு பகுதியில் மூன்று இடங்களில் குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இவர் இந்துத்துவா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது உறுதியானது.  ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில், இந்துத்துவ எதிர்ப்பாளராகச் செயல்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே கௌரி லங்கேஷ்சும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.