தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–2 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு மனித நேய மையம் நடத்தும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா இலவச திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு மனித நேய மையத்தின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமை வகித்தார்.
தமிழக அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகர் முன்னிலை வகித்தார். மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி.யுமான நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மனித நேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி பேசியதாவது:–
“நீங்கள் வெற்றியாளராக உருவாகவேண்டும். அதற்கு மனித நேய சிந்தனைகளை உங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். இது ஒரு சமூக மாற்றத்திற்கான அமைப்பு. தகுதியின் பேரில் பணி வாய்ப்பு கிடைக்கும்போது கடமையைச் செய்ய அரசு சம்பளம் அளிக்கிறது. கடமை உணர்ச்சியுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.
ஜனநாயக கட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும். அதற்கு நல்ல அதிகாரிகள் தேவை. நல்ல அதிகாரிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் இந்த மனித நேய அறக்கட்டளை.
மனித நேயம் எந்த பணியில் ஈடுபட்டாலும் வெற்றி பெறும். அதற்கு காரணம் முகம் தெரியாத மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை சாதி, மதம் பார்க்காமல் திறன் படைத்த மனிதர்களை உருவாக்குகிறது.
மனித நேய மையம் போட்டி தேர்வாளர்களை முதன்நிலை தேர்வுக்காக படிக்க வைப்பது, இலவசமாக எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பது. பாடம் நடத்துவது, பாடத்திற்கான தேவைகளையும் செய்து கொடுப்பது, இணையதளம் மூலம் வழிகாட்டுவது, முதன்மை தேர்வுக்கு வரும் மாணவர்கள் எங்கு படித்தாலும் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து தேர்வுக்கு தயார் செய்வது ஆகிய உதவிகளை செய்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் மனித நேய மையத்தை சேர்ந்த மாணவர்கள் 7 முறை முதலிடம் பெற்றுள்ளனர் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதற்கு காரணம் தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்ற 250–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் மனித நேய மைய மாணவர்களை நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்வதே ஆகும். இந்தியாவிலேயே நேர்முகத்தேர்வுக்கு அதுவும் இலவசமாக பயிற்சி வழங்கும் மையம் என்றால் அது மனித நேய மையம் மட்டும்தான். இதேபோல் நீங்களும் மாதிரி நேர்முகத் தேர்வை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு செல்கின்ற ஒவ்வொருவரும் கடமை தவறாமல் நேர்மையான அதிகாரியாக பணியாற்றுவேன் என உறுதி எடுத்துக்கொண்டால் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்த மையத்தில் படித்த தினேஷ் என்ற மாணவன் வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அதிகாரியாக தேர்வு பெற்றார். பின்னர் படிப்படியாக குரூப்–2, குரூப்–1 தேர்வுகளில் வெற்றி பெற்று தமிழக அரசு அதிகாரி ஆனார். பின்னர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார்” என்று சைதை துரைசாமி பேசினார்.