தஞ்சை :
தஞ்சை மாவட்டம், தீபாம்பாள்புரம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு போராடிய திருமாவளவன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்பட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் டிடிவி தினகரன் திடீரென சந்தித்து பேசினார்.
தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எண்ணை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 39 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில், எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கண்டித்து அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே 39 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பாரம்பரிய பறை இசைத்து பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.
போராட்டக்குழுவினர், அம்மாப்பேட்டை நான்கு வழிச்சாலை வழியாக மருவத்தூரில் புதிய எண்ணெய் கிணறு அமையும் இடத்தை முற்றுகையிடப் புறப்பட்டனர்.
அவர்களை தடுத்த போலீசார் கைது செய்து அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டிடிவி தினகரன், உடனடியாக விரைந்து வந்து, கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது.