மும்பை

காராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் சொத்துக்கள் பத்தே ஆண்டுகளில் 1500%  அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா தனது வேட்புமனுவில் அளித்துள்ள சொத்துக்களின் விவரப்படி, 2004ல் ரூ 2.01 கோடிகளாக இருந்த சொத்துக்கள் தற்போது 2014ல் ரூ. 32.01 கோடிகளாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த விவரங்களில் அவருடைய மகனின் சொத்தான லக்ஷ்மி பவனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.   தற்போது இந்த குடியிருப்பு  மாற்றியமைக்கப்படும் போது இந்த விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குடியிருப்பு  சட்ட விரோதமாக அவருடைய மகனுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஏதும் தெரிவிக்கவில்லை.  ஆனால் இதை தெரிவித்த சமூக ஆர்வலர் அங்கித் ஷா இதை உறுதி படுத்தியதுடன், இந்த குடியிருப்பு அவர் மகனுக்கு வழங்கப்பட்டது போலவே அமைச்சரின் உறவினர்களுக்கும் பல குடியிருப்புகள் சட்ட விரோதமாக குறைந்த விலையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவுகான் உட்பட பல அரசியல் தலைவர்களும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.

இந்த சொத்து உயர்வு அவர் காட்கோபர் குடிசை மாற்று கட்டிடங்களில் பல குடியிருப்புக்களை சட்ட விரோதமாக அளித்ததின் காரணமாகவே உயர்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்