தருமபுரி : சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை, தனில் காலில் உள்ள ஷூவை கழற்றி அடிக்க பாய்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வைரலான நிலையில், அந்த காவல்துறை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
தருமபுரி பைபாஸ் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரியுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 24மணி நேரம் செய்யப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் புறக்காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அங்கு பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், டூட்டியில் இருக்கும்போது, அருகே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்து விட்டு, மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவாராம். அதை வழங்குவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஓட்டால் நிர்வாகிக்கும் காவேரிக்கும் இடையே அவ்வப்போது சலசலப்பு எழும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று காவேரி சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கவில்லை. அதனால் ஓட்டல் உரிமையாளர் பணத்தை வைத்துவிட்டு செல்லுங்கள் என கறாராக கேட்டுள்ர். ஆனால், போலீஸ்காரர் காவேரி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதுடன், நாளை சாப்பிட வரும் போது தருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், அடுத்த நாள் உணவு சாப்பிட்ட பிறகும் அவர் பணம் கொடுக்கவில்லை என்ற கூறப்படுகிறது.
இதனால், அந்த கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர், முதல் நாள் அந்த எஸ்எஸ்ஐ சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி முத்தமிழை அடிக்க முயன்றார். இதை கண்ட ஒட்டலில் சாப்பிட்ட பொதுமக்களும், ஓட்டலில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் தடுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இநத் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
இதைத்தொடர்ந்து எஸ்எஸ்ஐ காவேரி தாக்க முயன்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் கடை உரிமையாளர் மற்றும் எஸ்எஸ்ஐ காவேரியிடம் விசாரணை நடத்தினார். அப்போது போலீசார் காவேரி ஒவ்வொரு முறையும் இவ்வாறு அடாவடி செய்து வருவது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆணையிட்டார்.