சென்னை:
அரசு பேருந்தில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது என்று ஆர்டிஐ-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், காவல்துறையை சேர்ந்தவர்கள் தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது உண்டா என்று, போக்குவரத்துத் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில்அளித்துள்ள போக்குவரத்து அதிகாரிகள், அரசுப் பேருந்தில் காவல்துறையினர் இலவசமாக பயணம் செய்ய முடியாது என தெரிவித்து உள்ளனர்.
பொதுவாகவே தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும், காவலர்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இது சில இடங்களில் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், ஓசி பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்த விவகாரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரண்ட் அனுமதியில்லாமல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்லிமிடெட் நிறுவனப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், காவல்துறையை சேர்ந்தவர்கள் பணிநிமித்தம் அல்லாமல் சொந்த தேவைகளுக்கோ, பணிக்கு வரும்போதோ, வீடு திரும்பும் போதோ வாரண்ட் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.