மதுரை,

கோக் பெப்சி குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க கோரிய மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்டு கிளை.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளான கோக், பெப்சி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர்  அருகே உள்ள  தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் வெளிநாட்டு குளிர்பான ஆலைகளை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லையை சேர்ந்த ராகவன் என்பவர், தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,  ஆற்றிலிருந்து தினமும் 46.66 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. 25 தனியார் நிறுவனங்களுக்கு நீர் தருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுதாரர் அம்மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை ஆரம்பத்தில் தடை விதித்தது. பின்னர் தடையை நீக்கி தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள், பொதுமக்களின் போராட்டம்  வெடித்தது. கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தாகாரத் உள்பட முக்கிய தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.

அதன் காரணமாக  கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் நீர் எடுக்க தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 10ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், குளிர்பான நிறுவனங்கள் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து ஆட்சியரின் தடையை கோர்ட்டு நீக்கியது.

பின்னர் இதுகுறித்து ராகவன் என்பவர்  தொடர்ந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக  மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது நெல்லை மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.