டெல்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் நடைபெறும் என்று மக்களவை  சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தநிலையில்  ஜூன் மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக, கடந்த 7ந்தேதி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு  ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து,   வீடியோ மாநாடு மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா என்று ஆராய இரு அவைகளின் செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது:-–
கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை நடைபெற்றது.
தற்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சோதனையான காலமாக இருந்தாலும் மழைக்கால கூட்டத்தொடர் தடை ஏதும் இன்றி நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். எனினும் அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தும் உள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தற்போது உள்ளது போல சமூக இடைவெளி கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டால் கூட்டம் நடத்துவது எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்விக்கு நேரம் வரும் போது, அந்த சூழ்நிலையை பொறுத்து இதற்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.