கோவை: தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க என நேரடியாக குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே மாநில அரசு திமுக அரசுதான் என்றும் கூறினார். மேலும்,  , திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த செங்கோட்டையன், எடப்பாடிக்கு 10நாள் கெடு விதித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் எடப்பாடியின் சுற்றுப்பயணம் நடைபெற்றது. கோவை வந்த அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதனையடுத்து  கோவை குனியமுத்தூர் தொகுதி மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு எம்எல்ஏ  எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சி SP வேலுமணி என்று புகழாரம் சூட்டியவர்,  அதிமுக மக்கள் கட்சி, அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும்.

ஆனால்,  திமுகவில் அப்படி வரமுடியுமா? திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி.  கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இப்போது இன்பநிதியாம்.

அதனால் வரும்  2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன்,   மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. அதனால் வீடுவீடாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடி கையெழுத்து வாங்குகிறார்கள்.

இந்த அவல நிலையில் திமுக இருப்பதை மறந்து விட்டு அதிமுகவைப் பற்றி பேசுறார் உதயநிதி. அதிமுக ஐசியுவில் இருக்கிறதாம், திமுக தான் ஐசியுவில் இருக்கிறது. திமுக ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததைப் பற்றியே பேசுகிறார்கள். மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பது அதிமுக நிலை, ஊழல் அரசான திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். இரண்டு கட்சிக்கும் ஒரே கருத்து என்பதால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். அதிமுக பாஜக கூட்டணி வைத்ததுமே திமுக பயந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை விற்பனை அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் அடிமையாகி அழிவுப்பாதையில் செல்கிறது.

சட்டமன்றத்தில் பலமுறை சொல்லிப்பார்த்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார். சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. இந்த ஆட்சி இருக்கும் வரை அவரவர் குடும்பத்தை அவரவர் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கோவையில் எத்தனை பாலங்கள், சாலைகள், பூங்கா, கலை அறிவியல் கல்லூரி, குடிநீர் திட்டம் என்று ஏராளமான திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது. அதிமுக திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறார் ஸ்டாலின். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் கொரோனா காலம். அது அதிமுக ஆட்சியில். விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது, விலையை கட்டுப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏழை மக்களிடம் கிட்னி திருடிய ஒரே கட்சி திமுக தான்.  நாமக்கலில் ஏழை மக்களை ஏமாற்றி திமுகவினர் கிட்னியை திருடி உள்ளனர். அதனால்,  திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு மக்கள் யாரும் சென்றுவிட கூடாது, அப்படி சென்றால்,உங்கள் கிட்னியை உருவிவிடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.