சென்னை:
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை சென்றுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து அவினாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் கோவை, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாளை காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பல வண்ண மலர்களை கண்டு ரசிக்கிறார். பின்னர் ஊட்டி உதயமாகி 200 ஆண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 21-ம் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.