சென்னை: அடுத்த ஆட்சி வேற மாதிரி இருக்கும் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சா, வரும் தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும் என்றும் 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என நிர்வாகிகள் சூளுரைத்தனர். பின்னர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார். “வரும் 2026ஆம் ஆண்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரைக்க வேண்டும். இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் சொன்னார்கள் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு. மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்கும்” என்றார்.
“கூட்டணி தேர்தலுக்கு தேர்தல் மாறும், அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக” என்றவர், இந்தியாவிலேயே உண்மையான உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.
தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக. 2021 தேர்தலில் வெறும் 1.98 லட்சம் வாக்குகளில் தான் ஆட்சி பறிபோனது.இன்னும் 50 ஆயிரம் வாக்குகள் மட்டும் வாங்கியிருந்தால் நமக்கு இன்னும் 23 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக கிடைத்திருப்பார்கள். நம்மை விட திமுக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றும் ஆட்சிக்கு வந்துவிடவில்லை என்றவர், மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம்.
பெரிய கூட்டணி அமைத்த திமுக 26.5%வாக்குகளையே பெற்றது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வின் வாக்கு சதவீதம் உண்மையில் சரிந்துள்ளது.
தொடர்ந்து, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். பிறகு அமைச்சராக்கினார்கள். இப்போது துணை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தி.மு.க வந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும், அப்படிப்பட்டவர்களை 2026-ல் மக்களால் மாற்றிக் காட்டப்படுவார்கள்.
அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது. 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 23 தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 19.3 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில், 20.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். பெரிய கூட்டணி இன்றியும், பிரதமர் வேட்பாளர் இன்றியும் நாம் 1 சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளோம். பாஜவினர் தமிழகத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி 18.80 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலில் 18.28 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அரை சதவீதம் வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
2014ல் பாஜ 8 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது, 5.56 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலில் பா.ஜனதா 13.15 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும், ஆனால், 11.24 சதவீத வாக்குகளை பெற்றது. 1.91 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜவை விட அதிமுக ஒரு சதவீதம் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். ‘யானைக்கு பலம் தும்பிக்கை, நமக்கு பலம் நம்பிக்கை’.
எந்த ஒரு மனிதனுக்கும் நம்பிக்கை இருந்தால் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியலாக இருந்தாலும் நம்பிக்கை என்பது மிகப்பிரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம். அதைநாம் உணர வேண்டும்.
சட்டசபையில் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் 68 ஆயிரத்து 467 பூத் பாகம் உள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற, ஒரு பூத்துக்கு 9 பேர் நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம் வெற்றி உறுதி. சில மாவட்டங்களில் அதிமுக ஐ.டி.விங் முறையாக செயல்படவில்லை. அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு, வருகிற சட்சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணியை பொறுத்தவரையில் நிச்சயம், அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும் இப்படி தான் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கலாம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி, மக்கள் எதிர்பார்க்கும், விரும்பும் கூட்டணி அமையும். ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். யானைக்கு பலம் தும்பிக்கை; நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.”
இவ்வாறு கூறினார்.