டில்லி:
தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே -ஐ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதி மன்றத்தில் உள்ள மூத்த நீதிபதி, எஸ்.ஏ.பாப்டேவை (சரத் அரவிந்த பாப்டே (Sharad Arvind Bobde) புதிய தலைமை நீதிபதியாக தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மரபுப்படி பரிந்துரை செய்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை பரிசீலனை செய்த சட்ட அமைச்சகம், புதிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக அறிவிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதைத்தொடர்ந்து, எஸ்.ஏ.பாப்டேவை உச்சநீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்தார்.
எஸ்.ஏ.பாப்டே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். தற்போது உச்சநீதி மன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ளார்.
இந்திய உச்சநீதி மன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உள்ளது.