கொல்கொத்தா:

ரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல், தங்கம் விற்பதில் புது கட்டுப்பாடு அமலாகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக விற்பனை செய்ய முடியும்.

இந்தியாவில்  தங்கத்தில் முதலீடு செய்வது பாரம்பரிய பழக்கமாகும்.  தங்க நகையை சேமிப்பாக வும் இந்தியர்கள் நினைக்கிறார்கள். அவசர தேவைக்காக விற்று நிலைமையை சமாளிப்பார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு நிதி மசோதாவில் ஒரு திருத்தத்தை  கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு நபர், ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக விற்பனை செய்ய முடியும்.

இதற்கு முன், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே நகைகளை ரொக்கமாக விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால்  நகை கடைக்காரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ரசீதுகளை போட்டு, நகைகளை வாங்கிக்கொள்வார்கள். ஆகவே வீட்டு நகைகளை விற்பனை செய்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

ஆனால் இனி அது நடக்காது.  ஒரு நபருக்கு, ஒரு ரசீதுக்கு மேல், நகை கடைக்காரர் பதிவு செய்தால், வருமான வரித்துறையினருக்கு  அவர் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.

இது குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை கடைக்காரர்கள் சங்க தேசிய இயக்குனர் சவுரப் காட்கில் “இந்த கட்டுப்பாட்டினால்  கிராம மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  அவர்களுக்கு வங்கி களில் பணத்தை டெபாசிட் செய்வது, ஆன் லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் தெரியாது” என்றார்.

மேலும் அவர், “தற்போதைய புது கட்டுப்பாட்டினால் நகரங்களில் எந்த மாறுதலும் வராது. ஏனென்றால், நகரங்களை பொறுத்தவரை நகைகளை விற்பனை செய்ய வருபவரின் வங்கி கணக்குக்கு நகை கடைக்காரர் தொகையை செலுத்தி விடுவார். அவர் பின்னர் வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வார்,” என்று அவர் தெரிவித்தார்.

“திடீரென வரும் மருத்துவச் செலவுகளுக்கோ இதர செலவுகளுக்கோ நடுத்தர மக்களுக்கு கைகொடுப்பது நகைகள்தான். அவசரமாக மருத்துவமனைக்கு 50 ஆயிரம் கட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மக்கள் திண்டாடிப்போவார்கள்” என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.