சென்னை:
மிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.
இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில்  தமிழக முதல்வர் ஜெயலலிதா  4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்டங்கள் தொடர்பான  அறிவிப்பை வெளியிட்டார்.
eb-jeya
அதில் கூறி இருப்பதாவது:-
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மிகக் கடுமையான மின் கட்டுப்பாட்டு முறைகள் கொண்டு வரப்பட்டன. உயர் அழுத்த தொழிற்சாலை கள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 விழுக்காடு மின்வெட்டு; குறைவழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 20 விழுக்காடு மின்வெட்டு; இந்த இருசாராருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 95 விழுக்காடு மின்வெட்டு; வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு பல மணி நேரம் மின் வெட்டு என மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மின்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள்; மத்திய அரசு திட்டங்களில் இருந்து நமக்கான பங்கு, நீண்டகால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலம் பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகிய வற்றின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 8432.5 மெகாவாட் மின்சாரத்தை நாம் பெற்று வருகிறோம்.
மேலும், அனைவரும் தரமான மின்சாரம் பெறும் வகையில் 15,505 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள், மின் பாதைகள், மின் மாற்றிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 79 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் வெட்டு அறவே இல்லை என்ற நிலை எய்தப்பட்டுள்ளது. தனியாரால் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் 1.6.2016 முதல் நீக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் தனி நபர் சராசரி மின் பயன்பாடு 1,010 யூனிட்டுகள் என உள்ள நிலையில், தமிழ் நாட்டில் இது 1,280 யூனிட்டுகள் என உயர் அளவாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் நான் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும், தற்போதுள்ள நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி 100 யூனிட் வரையிலான மின்சாரம் எவ்வித கட்டணமும் இன்றி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் பற்றி இந்த அவையில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. கோதையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கோதையாறு-1 அணை 2.6 டி.எம்.சி. அடி, கொள்ளளவு கொண்டதாகும். இவ்வணையின் நீரைப் பயன்படுத்தி கோதையாறு-1 புனல் மின் நிலையம் 60 மெகாவாட் நிறுவு திறனுடன் 9.12.1970 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தப் புனல்மின் நிலையத்தின், உற்பத்தி இலக்கு 150 மில்லியன் யூனிட் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு 193 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஒரு புனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் 35 ஆண்டுகள் தான். 45 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த புனல் மின் நிலையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்திடவும், நிறுவுதிறனை 60 மெகாவாட்டிலிருந்து 70 மெகாவாட்டாக அதிகப்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த புனல் மின் நிலையத்தை மேம்படுத்தி நவீனமயமாக்கும் பணிகள் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்தப் பணிகள் 43 மாதங்களில் முடிக்கப்படும்.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின் இந்த புனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 225 மில்லியன் யூனிட்டாக உயரும்.
2. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 23,715 பகிர்மான மின் மாற்றிகள் இயக்கத்தில் உள்ளன. இதில் புறநகர்ப் பகுதிகளில் 17,535 மின் மாற்றி அமைப்புகள் உள்ளன. மின் விநியோக கம்பிகளில் அதிக வெப்பம் மற்றும் தளர்வினால் பழுது ஏற்படும் போது, மின் விநியோகத்தில் தடை ஏற்படுகிறது.
மேலும், மழை காலங்களில் இந்த மின் மாற்றிகளில் உள்ள பழுதை சீர் செய்ய காலதாமதமாகிறது. பழுது பார்க்கும் போது மின் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் தவிர்க்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மின் மாற்றிகள் வளைய சுற்றுதர அமைப்புகளாக, ஆக மாற்றியமைக்கப்படும்.
அதிக பாதுகாப்புடனும், விபத்தை தவிர்க்கும் விதத்திலும் அனைத்து பாகங்களும் உள்ளடங்கியதாகவும் இவை அமையும். சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள, 17,535 மின் மாற்றிகளும் 1,750 கோடி ரூபாய் செலவில் வளைய சுற்றுதர அமைப்புகளாக மாற்றி அமைக்கப்படும்.
3. சென்னையில் 38,844 மின்தூண் பெட்டிகள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மின்தூண் பெட்டிகள் மழைக் காலங்களில் துருபிடித்து அதன் கதவுகள் சேதமடைகின்றன. அதன் காரணமாக மின் தடை மற்றும் மின் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு மின்தூண் பெட்டிகள் நவீன மயமாக்கப்படும். தற்போதுள்ள மின்தூண் பெட்டிகள் உயர் சிதைவு திறன் எரியிழை கட்டுப்பாட்டுடன் கூடிய, லேசான எஃகு உலோக உறை கொண்ட ஆறு வழி மின் தூண் பெட்டிகளாக மாற்றப்படும். சென்னை மாநகரில் உள்ள 38,844 மின்தூண் பெட்டிகள் 270 கோடி ரூபாய் செலவில் மாற்றப்படும்.
4. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூரில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடைய 1600 மெகாவாட் அனல் மின்நிலையம் 12,778 கோடி ரூபாய் செலவில் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி ஆகியவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கு, பணி ஆணை பாரத மிகுமின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மின் நிலையத்தின் இதர பாகங்கள் மற்றும் அதன் சார்ந்த பொதுவியல் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த அனல் மின்நிலைய பணிகள் 2020ல் முடிவடையும்.
இந்த அனல் மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக விருதுநகரில் 2×1500 எம்.வி.ஏ. திறனுள்ள 765/400 கிலோ வோல்ட் தொகுப்பு துணை மின்நிலையம் சுமார் 2,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேலும், கயத்தாறு, கமுதி, தப்பகுண்டு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை, முழுமையாக பயன்படுத்தும் வகையில் அந்த பகுதிகளிலுள்ள 400 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்கள் புதியதாக அமைக்கப்படவுள்ள விருதுநகர் தொகுப்பு துணை மின்நிலையத்துடன் இணைக்கப்படும்.
இதுவன்றி, உடன்குடி அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படவுள்ள மின்சாரத்தையும் இந்த துணை மின்நிலையம் வழியாக தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும்.
முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் அரியலூர் 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் மற்றும் கோவை 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் ஆகியவற்றுடன் இந்த விருதுநகர் தொகுப்பு துணை மின்நிலையம் இணைக்கப்படும்.
5. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி நிலையம் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை வடக்கு, சென்னை தெற்கு, வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய 9 தலைமை பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் 21 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில், தலா 20 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு சொந்தமான ஆறு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் மற்றும் தொண்ணூறு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் ஆகியவற்றில் தலா 20 கிலோவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
இவற்றின் மூலம் 2.52 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கப் பெறும். இந்த சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 26 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
4,126 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களின் வாயிலாக மின் உற்பத்தி அதிகரிப்பதுடன், சீரான மின் விநியோகத்திற்கும் வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.