நெடுவாசல்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 42வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 42-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின்  இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம்,  நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை மற்றும் வடகாட்டில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்   பொன்ராதாகிருஷ்ணன் கொடுத்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் அறிவித்து, அதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போட்டது.

இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

2வது கட்ட போராட்டம்  கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று 42வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் மட்டுமல்லது அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள்,  சிறுவர்கள், பெண்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து 42வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், பொதுமக்களின் நியாயமான போராட்டத்தை எந்தவொரு பத்திரிகையோ, டிவி சேனல்களோ மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்படவில்லை.

அதுபோல மத்திய மாநில அரசுகளோ, அமைச்சர்களோ இந்த பகுதி மக்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

மக்களின் வாழ்வுரிமை முக்கியமா?  முதலாளிகளின் வருவாய் முக்கியமா? என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஆளும் கட்சியினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டால் மட் டுமே நாங்கள் எங்களது தொடர் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என்று உறுதிபட கூறினர்.