டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து, முன்னாள் குடியரசு தலைவர் கோவிந்த் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

3வது முறையாக மோடி, பிரதமராக பதவி ஏற்றள்ள நிலையில், புதிய அரசின் முதல் 100 நாட்கள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய, சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுதும் ஒரே நேரத்தில், மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு உயர்மட்டக் குழு அமைத்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றனர். அரசியல் கட்சிகள், சட்டக் கமிஷன் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்த இந்த உயர்மட்டக் குழு, கடந்த மார்ச் 15ந்தேதி  ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு பயன்படுத்தும் வகையில், வாக்காளர்கள் அடையாள அட்டைகள், வாக்காளர் பட்டியல்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதற்கான சட்டத்திருத்தத்துக்கு 50 சதவீதத்துக்கு குறையாத மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மோடி மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார். புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயார் செய்யும்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,   இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்ய சட்ட அமைச்சகம் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களில், புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசாங்கத்திற்கான துறையின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.