திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை  நேற்று நள்ளிரவு  அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதன் காரணமாக அதிமுகவினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் அரசு அனுமதியின்றி அதிமுகவினர் ம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை நிறுவினர். இதுகுறித்து ஏராளான புகார்கள் வந்த நிலையில், சிலைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த அதிமுகவினர் அங்கு விரைந்து வந்து,  சிலைக்கு எதிரே ரோட்டில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்துசெல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கலைந்துசெல்லாததால், போலீசார் அவர்களை தூக்கிச்சென்று கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து நள்ளிரவிலேயே அங்கு நிறுவப்பட்டிருந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்  பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி, சிலைகளை கோணியால் மூடி அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த 24ந்தேதி ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெ. சிலைகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், ஆரணி பகுதியில் நிறுவப்பட்ட சிலையும் நேற்று முன்தினம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.