ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்  நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

 அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6யை இஸ்ரோ விண்ணில்  வெற்றிகரமாக ஏவியது.

முன்னதாக இந்த ராக்கெட் ஏவுவதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு, தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட் டவுன் டிசம்பர் 23ந்தேதி காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

அதைத்தொடர்ந்து,   இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று(டிச.24) காலை 8.54 மணியளவில்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறும்போது, “இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது. இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம், மேலும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது.

LVM3 நம்பகமான கனரக-தூக்கும் செயல்திறனைக் காட்டுவதன் மூலம், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்து கிறோம், வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்.

இந்த அதிகரித்த திறனும் தன்னம்பிக்கைக்கான ஊக்கமும் வரும் தலைமுறைகளுக்கு அற்புதமானவை என பாராட்டி உள்ளார்.

[youtube-feed feed=1]