சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

ந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 காலகட்டத்திற்குள் மூடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாயின.

தமிழகத்தில் மட்டும் 1322 தொழிற் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது தேசம் எதிர்நோக்கும் மிக அபாயகரமான சூழியலின் அறிகுறியே. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி மேல் குறிப்பிட பட்ட காலகட்டத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான சிறுகடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 2021 காலகட்டத்திற்குள் மேலும் 50 லட்சம் சிறுகடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின், பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, வேலைவாய்ப்பின்மை பெரும் அளவில் பெருகும்.

கொரோனா பெரும்தொற்றின் பின்னாலான தொழிற்துறை மாற்றங்கள் விநோதமானதாகவும், விசித்திரமானதாகவும் மாறிவருகின்றன. வணிகத்துறையில் கோலோச்சிய கப்பல் நிறுவனங்கள் சிதைந்து போயின. துறைமுக முடக்கங்களுக்கு பின்னால், கப்பல்களை பராமரிக்க முடியாமல் உலகம் முழுக்க எண்ணற்ற கப்பல்கள், கப்பலுடைக்கும் தலங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

இன்று வங்காள தேசத்தில் கொடிகட்டி பறக்கும் தொழில், கப்பலுடைக்கும் தொழில்தான். அது கப்பலுடைக்கும் தொழில் மட்டுமல்ல, இனிவரும்காலங்களில், உலகிற்கான விநியோகங்கள் மற்றும் வழங்கல் வணிகத்துறையை உடைப்பதாகும். இதன் தாக்கம் பெரும் துறைமுகங்களின் மூடல்களில் எதிரொலிக்கும். துறைமுகங்களை தொடர்ந்து, பெரும் சாலைகளுக்கான தேவை குறையும். இந்த காலத்தில் தான், நாம் உலகமயமாக்க காலகட்டத்திலான தொழிற்கொள்கையுடன் துறைமுகங்களையும், பெரும் சாலைகளையும் கட்டமைக்க போகிறோம்.

சிறிய தேசங்களும், கொரோனாவிற்கு பின்னான காலகட்டத்தில் உள்நாட்டு தேவைகளை உள்நாட்டிலே பூர்த்திசெய்யும் வேலைத்திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். மேலும், இனிவரும் காலங்களில், வெளிநாட்டு பணியாளர்களை குவைத் போன்ற தேசங்கள் பணியமர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். இது ஒரு சீரிய கொள்கைமாற்றமாகும்.

இதை போன்ற மாற்றங்களின் தாக்கங்களினால், சீன மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பெரும் தொழிற் நிறுவனங்கள் சரிவை சந்தித்ததும் இல்லாமல், பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்களுக்கு நிதி கொடுத்த பெரும் வங்கிகளும் நிதிச்சிக்கல்களில் மூழ்கியுள்ளன.

கொரோனா பின்னான காலத்தில் வீட்டில் இருந்து பணிசெய்யும் முறைமைகள் வெற்றிபெற்றுள்ளன. அதனால், வரும் காலங்களில், பணிநிமிர்தமாக வெளிநாடுகளுக்கு பணிசெய்வதற்கோ, உள்நாட்டில் வண்ண மயமான அலுவலகங்களுக்கோ தேவைக்குறைந்துள்ளது. இதன் தாக்கம், நகர்ப்புற நிலங்களின் விலைமதிப்பில் பெரும்மாற்றத்தை கொண்டுவந்துள்ளது, மற்றும் பெரும் கட்டுமான துறைகளை தலைகீழாக புரட்டிப்போடவுள்ளது.

மேலும், விமான போக்குவரத்து துறையும், விமான நிறுவனங்களும் எதிர்நோக்கும் சவால்களும் சொல்லிமாளாது. உலகம் இயல்புநிலைக்கு திரும்பும் நிலையில், பெரும் விமான நிறுவனங்கள் கடையை சாத்தியிருக்கும். இதனைப்போன்றே, சுற்றுலா துறையும், பெரும் சரிவை சந்தித்தாயிற்று. நவீன தங்கும் விடுதிகள் பராமரிக்க முடியாமல் திணறுகின்றன. இவை, தங்களோடு பெரும் பணியாளர்களின் வாழ்க்கையையும் சேர்த்து மூழ்கடிக்கும், என்றல் மிகையாகாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த விடுதிகளுக்கு உணவுத்துறை (catering) மாணவர்களை பயிற்றுவித்து பணியமர்த்திய கல்விநிறுவனங்கள் மூடுவதையோ, மாற்று திட்டத்தையோ யோசிக்க தொடங்கியுள்ளன.

இந்த காலகட்டத்தில்தான், எண்ணெய் நிறுவனங்கள் அத்துறையில் இருந்து வெளிவந்து உணவுத்துறையில் தடம் பதிக்க துடிக்க நினைப்பதில் நியாயம் புரியும். இனிவரும் காலம், உணவுத்துறை மற்றும் மருத்துவத்துறைக்கான காலமாகும். அதுவும், இந்தியா போன்ற பெரும் சந்தையையும், உற்பத்தியையும் உள்ளடக்கிய நாட்டில், உலகைஎதிர்நோக்கிய பெரும்சவால்கள், நமக்கான பெரும் வாய்ப்புகளாக மாற, பெரும் வாய்ப்புள்ளது. அதற்கு, நம்முடைய தொழிற் கொள்கைகள் மாறவேண்டும், எப்பொழுதும் போல் நம் தேசம் சவாலை சாதனையாகும் என்று நம்புவோமாக.

தேர்தலுக்கு பின்னான தமிழக அரசிற்கு மாறிவரும் தொழிற்சூழல் பெரும் சவாலாக அமையும். தமிழகத்தின், தொழிற்கொள்கை, இச்சூழியலை புரிந்து ஒரு தொலைநோக்கு திட்டத்தை கையிலெடுக்குமானால், நாளை நமதே.