ஸ்ரீஹரிகோட்டா:  நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் எந்திரம் நாளை மாலை நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.

தற்போது, சந்திரயான்3ன் லேண்டர், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.  இதற்கிடையில், சந்திரயான் – 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்புகொண்டுள்ளத என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, சந்திரயான்2  ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவுக்கு போட்டியாக ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் நிலவில் விழுந்து வெடித்து சிதறி  தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் செய்யும் இஸ்ரோவின் நடவடிக்கைகளை உலக நாடுகள்  உன்னிப்பாக  வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை காண இந்தியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இநத் நிலையில்,  சந்திரயான் -3 லேண்டர் கலன் நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பின்னர், தரையிறங்கும் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. இதுமட்டுமின்றி, தரையிறங்குவதற்கான சூழல் ஏற்படாவிட்டால், சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  சந்திரயான்3 லேண்டர் கலன் நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கவுள்ளது. இந்த நிகழ்வை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ முகப்புத்தகப் பக்கத்திலும் நேரலையில் காணலாம். மேலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலை ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.