சென்னை:  அரசின் உத்தரவுகளை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்ததால், இன்று ஐஐடியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவி, கிளஸ்டராக மாறி இருப்பது  தெரிய வந்துள்ளது. இது மாஸ்க்  அணியாதவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செநயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை ஐ.ஐ.டி., பின்னர் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக, டிசம்பர் 1ந்தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இங்குள்ள 13 விடுதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.  அவர்களுக்கு ஒரே இடத்தில் சமையல் செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவை மாணவர்கள் தங்களது இருப்பிடத்திற்கு எடுத்துச்சென்று உண்ண அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால்,  மாணவர்கள் அதை மெத்தனமாக எடுத்துக்கொண்டும், மாஸ்க் அணியாமலும், ஒரே இடத்தில் மொத்தமாக அமர்ந்து உணவு அருந்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மாணவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட, அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில்  கொரோனா தொற்று உறுதியானது. இது மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட  முதல்கட்ட சோதனையில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஐடி நிர்வாகம், உடனே   அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. . நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104 ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்ககளிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,   கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறியவர்,  நேற்று வரை ஐஐடியில் பரிசோதனை செய்தவர்களில் 25% பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 978 மாதிரிப் பரிசோதனைகளில் 25 பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 953 பரிசோதனை முடிவுகளில் டிச.1-ம் தேதி முதல் இதுவரை 183 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது”  என்றார்.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று  கூறியவர், முகக்கவசம் அணியாமல் இருந்ததாலேயே சென்னையை ஐஐடி இன்று கொரோனா கிளஸ்டராக மாறி இருப்பதாகவும், இது தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் என்றவர்,  முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றவர், மாஸ்க் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார். மேலும், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதிகள், மேன்சன்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஐஐடியில் கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து இறுதியாண்டு வகுப்புகளைத் தொடர்வது குறித்து உயர் கல்வித்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.