சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வகையில் நாளை காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் என தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற சீனிவாசன் ஏற்கனவே அறிவித்தருந்தார். அதன்படி, நாளை சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வதற்காக, தேர்தல் சான்றிதழை கொண்டுவரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டாக ட்டசபை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இருந்து, ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தை தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுள்ள திமுகவைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமையேற்று நடத்துகிறார். கூட்டம் தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுகும் நிகழ்வு நடைபெறும். அதையடுத்து, சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்த அப்பாவு சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்றும் துணை சபாநாயகராக, தற்காலிக சபாநாயகராக உள்ள கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.