டெல்லி,

எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும்  இ-சிகரெட் சட்டத் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனும்  சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு, ராஜீவ்காந்தி மறைவைத் தொடர்ந்த, சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்தது.

எஸ்பிஜி பாதுகாப்பு

இந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்வதாகவும், இனிமேல் பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படம் என்று மத்தியஅரசு அறிவித்தது. சுமார் 28 ஆண்டுகளாக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த  எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதன்படி,  பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும்  எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும்.

மேலும் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடன் அரசு வீட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பதவி முடிவடைந்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது  சோனியா காந்தி குடும்பத்தினருக்கு  ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் கூடிய ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு  வழங்கப்பட்டு உள்ளது.

இ-சிகரெட்

அதுபோல எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ–சிகரெட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. இதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்றும் வகையில் இ–சிகரெட் தடை மசோதா ஒன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி , ‘எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை (தயாரிப்பு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, வினியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல்) மசோதா’ போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடைபெற்ற நிலையில், மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த   இதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இ–சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.