மதுரை:
வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் அரசியலுக்காக மீண்டும் நிற்கிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் கமலஹாசன் கூறினார்.
நாளை தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர், கொடி குறித்து அறிவிக்க உள்ள நடிகர் கமலஹாசனை இன்று காலை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திடீரென சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல், பல தரப்பினரையும் நான் சந்தித்து வருவதில் தற்போது சீமானும் ஒருவர் என்றார்.
அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் நீங்கள், அதிமுக நிர்வாகிகளை ஏன் சந்திப்பது இல்லை என்ற செய்தி யாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல், ” அங்கு தான் ஊழல் இருக்கிறது ஆட்சி சரியில்லை என்று நான் சொல்லிக்கொண்டி ருக்கும் போது அவர்களை நான் நிச்சயம் சந்திக்க முடியாது. சந்திக்கவும் மாட்டேன் ” என்றார்.
அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த கமல், எனது பயணத்தை தொடங்கிவிட்டேன், என் கட்சியில் உள்ளடக்கிய நபர்கள் நாளை மதுரை மாநாட்டில் பங்கேற்கிறார்கள் என்று கூறிச் சென்றார்.
இந்நிலையில் மதுரை வந்தடைந்த அவருக்கு அவரது ரசிகர் மன்றத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கமல், வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன் என்றார்.
என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் தற்போதும் நிற்கிறேன். எனது பயணம் நாளை காலை ராமேஸ்வரத்தில் தொடங்கி, பரமக்குடி சென்று பின்னர் மாலையில் மதுரை வருவேன் என்றார்.
மதுரையில் நடைபெற்ற உள்ள பொதுக்கூட்டத்தில், கட்சி கொடி ஏற்றப்படும், கொள்கைகளில் சாராம்சம் அறிவிக்கப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்.
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள கமல், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று கூறி, மூத்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து ஆசி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது கட்சி குறித்த அறிவிப்பு குறித்து தனது டுவிட்டர் பதிவில் கமல் கூறியிருப்பதாவது,
” நாளை (21 ம் தேதி ) துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன்.
வருக வருக புது யுகம் படைக்க .
இவ்வாறு கூறியுள்ளார்.