பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்  கொடுத்து, சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது, டிஐஜி ரூபாவின் அதிரடி சோதனை காரணமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில்  சொகுசு வசதிகள் செய்து தந்ததாக புகார் கூறப்பட்ட 2 உயர் அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள் பதற்றம் அடைந்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஜாலியாக இருந்தாகவும், தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு விரும்பியதை சமைத்து சாப்பிட்டதாகவும், அவ்வப்போது சிறை விதிகளை மீறி சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

சிறைத்துறை டிஐஜி ரூபாவின் அதிரடி சோதனையின்போது இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதாக ரூபா அரசுக்கு அளித்த அறிக்கை மற்றும் வீடியோ பதிவு  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க, அப்போதைய சிறைத்துறை  டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும்  டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்,  ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து முன்னாள் சிறைத்துறை டிஐஜி உள்பட  பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை சூப்பிரண்டு மற்றும் சூப்பிரண்டாக இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பரப்பன அக்ரஹார சிறை வளாகம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது.