போபால்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 24 மணிநேர உதவி மையம் அமைத்து, அவ்வழியே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலின் புறநகர் பகுதியில், விதிஷா பைபாஸ் சாலையில் அவர்கள் இந்த உதவி மையத்தை அமைத்துள்ளனர்.
பசியுடன் அந்த வழியே கடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்டவற்றை அளிப்பதோடு, பெண்களுக்கான சானிட்டரி நேப்கின்கள் வரை இலவசமாக வழங்குகின்றனர்.
மேலும், நடந்து செல்பவர்களுக்கு ஷு மற்றும் செருப்புகளையும் வழங்குகின்றனர். தேவையானவர்களுக்கு மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும் இவர்கள் தவறவில்லை. இவர்களின் உதவியால் உணர்ச்சி வசப்பட்ட பலர், இவர்களிடம் தங்களுடைய மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில், அக்கறை காட்ட வேண்டிய மத்திய அரசு அலட்சியம் செய்யும் நிலையில், வைரஸை பரப்பியவர்கள் என்று பழிசுமத்தப்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் செய்யும் இந்த சிறந்த சேவை, பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.