சென்னை:

மதுரை வாக்கு எண்ணும் மைய அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி சென்ற விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை பணி மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரியும், மதுரை கலெக்டரும்,மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என தேர்தல் ஆணையம் தரப்பிலும் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டனர்.

தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்துக்கு கலெக்டர் மீதோ, அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தலைமை தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான். அவரால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எல்லா அதிகாரிகளும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது, அதிகாரம் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து, மதுரை கலெக்டர் நடராஜனையும், உதவி தேர்தல் அதிகாரியையும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.