ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று மாலை தொடங்கியது. இதில், ஸ்பெயினுடன் மோதிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்திய ஹாக்கி அணி தனது 200வது கோல் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ரூர்கேலாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானம் உலகின் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா இன் கண்கவர் தொடக்க விழா 11ந்தேதி (புதன்கிழமை) மாலை கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதை நாடு முழுவதும் உள்ள ஏராளமான ஹாக்கி ஆர்வலர்கள் கண்டுகளித்தனர்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் தயாப் இக்ராம், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி ஆகியோர் கலந்து கொண்டு 16 அணிகளின் உறுப்பினர்களை வரவேற்றனர்.
ஆடவர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2023 லீக் சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் 13ந்தி முதல் 29ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 44 போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
குரூப் A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் அணிகளும், குரூப் B பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா அணிகளும், குரூப் C பிரிவில் சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் D பிரிவில் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
குரூப் C பிரிவில் இடம் பிடித்துள்ள சிலி நாட்டிற்கு இதுவே முதல் உலககோப்பை தொடர் ஆகும். மேலும் ஹாக்கி உலக கோப்பை வரலாற்றிலேயே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணி, இந்த முறை உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11ம் தேதி இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று (13ந்தேதி) மாலை 7 மணிக்கு, ரூர்கேலாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
முன்னதாக மதியம் ஒரு மணிக்கு அர்ஜென்டினா அணி தென் ஆப்பிரிக்காவையும், மதியம் மூன்று மணிக்கு ஆஸ்திரேலிய அணி பிரான்ஸ் அணியையும், மாலை ஐந்து மணிக்கு இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியையும் எதிர்கொண்டன.
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்தியது. டி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த ஸ்பெயினுடன் மோதிய இந்த ஆட்டம், ஒரு பிளாக்பஸ்டராக அமைந்தது. இந்திய அணிக்கு ஆட்டத்தின் 11 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றமல் வீணடித்தது. எனினும் அடுத்த நிமிடமே பெனால்டி கார்னர் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.
இதனை சொந்த மண்ணில் விளையாடும் ரோஹிதாஸ் அமித் கோலாக மாற்றினார். இதன் மூலம் உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி 200 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ஹர்திக் சிங் கோலாக மாற்ற, இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதே போன்று ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை இநதியா வீணடித்தது. இதே போன்று ஸ்பெயின் வீரர்களின் கோல் வாய்ப்பை, இந்தியா கோல் கீப்பர் பதாக் முதல் பாதியில் அபாரமாக தடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 2க்கு0 என்ற கோல் கணக்கில் வென்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி வரும் 15ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் வெல்ஸ் அணியை இங்கிலாந்து 5க்கு0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த பட்டியலில் 313 கோல்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 267 கோல்களுடன் நெதர்லாந்து 2வது இடத்திலும், 235 கோல்களுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும், இந்தியா தற்போது 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.