டெல்லி: லடாக் எல்லைப்பகுதியில் 6 மலைமுகடுகள் (பிங்கர்ஸ்) இந்திய ராணுவம் கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளது.
லடாக் லே எல்லைப்பகுதியில் இந்திய சீன ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எல்லைப்பகுதியில் இந்தியா ராணுவத்தை குவித்து வருகிறது.
சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் லடாக்கின் கிழக்கு பகுதியில் 6 பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் எல்லை பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைதலைமை தளபதிபிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரு வாரத்தில் மட்டும், லடாக்கின் கிழக்கில் உள்ள பிங்கர் 4 பகுதியில் அமைந்துள்ள மகர், குருங், ரிசெஹன் லா, ரெஜாங்லா, மொக்பாரி உள்ளிட்ட 6 மலைமுகடுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பனி நிறைந்து காணப்படும் இந்த மலைமுகடுகளை இந்திய ராணுவம் கைப்பறிய நிலையில், சீன ராணுவம், அங்கு பணியாற்றி வரும் வீரர்களின் மனநிலையை மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மழைக்காலங்களில் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் இருக்க முடியாது என்ற கூறி வருகிறது.
இருந்தாலும், யாரும் செல்லாத இந்த உச்சி பகுதிகளுக்கு, இந்திய ராணுவம் விரைந்து சென்று தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.
பாங்காங் ஏரியில் இருந்து தெற்கு கரை பகுதியில் உள்ள பிளாக் டாப் மற்றும் ஹெல்மெட் டாப் ஹில் ஆகிய பகுதிகள் தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக, சீன ராணுவம், ரெஜாங் லா மற்றும் ரெசென் லா பகுதி அருகே கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது.
எல்லையில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து, பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயல் பட்டு நடவடிக்கைகள் எடுப்பதுடன், கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.