நீலகிரி: உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவியின் வளையலை உருவிய விவகாரம் குறித்து கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம் தெரிவித்துள்ளார். வளையலை உருவ வில்லை, தலைவியின் கையை பிடித்து இழுத்துதான் விட்டேன் என கூறியுள்ளார்.

குன்னூரில் நகராட்சியில் இந்தி மொழிக்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியின்போது, உறுதிமொழியை மதிக்காமல், கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர் நகராட்சி தலைவியின் வளையலை உருவினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இதை வைத்து திமுகவை திருட்டு திமுக என பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவர் சுசீலா கையில் இருந்த வளையலை, கவுன்சிலர் ஜாகிர் உசேன் உருவ முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, அவரின் கையை தட்டிவிட்டார். ஓரிரு வினாடிகளில், சுசிலா கை மீது மீண்டும் தனது கையை வைத்த ஜாகிர் உசேன் வளையலை கழற்ற முயன்றார். உடனடியாக சுசீலா தனது கையை கீழே இறக்கினார். உறுதிமொழி நேரத்தில் அதை முறையாக எடுக்காமல், கவுன்சிலர்களும், நகராட்சி தலைவியும் சிறுபிள்ளைகள் போல விளையாடியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுவைரலானது. இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ” ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது” என விமர்சித்து உள்ளார்.
இந்தநிலையில், அந்த வீடியோ குறித்து குன்னூர் நகராட்சி கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, ‘நான் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்றேன். நான் அங்கே நின்றபோது எனக்கு பின்னே நின்ற மகளிர் சிலர் மறைக்கப்பட்டனர். எனவே சகோதரியான நகராட்சி தலைவரை கையை பிடித்து இழுத்துவிட்டேன். இதனை வைத்து ட்ரோல் செய்து வளையல் திருடுகிறேன் என்று அவதூறு பரப்பிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க… அதுபோல உள்ளது கவுன்சிலர் ஜாகிர் உசேனின் விளக்கம்…