பேருந்தில் பை திருடு போனது குறித்த வழக்கு பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அலைய வைத்ததுள்ளனர்.
சேலம் மாவட்டம் அரியபாளையத்தைச் சேர்ந்த கபிலன் (24) என்ற இளைஞர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நேர்காணலுக்காக திங்கட்கிழமை அன்று கோவை சென்றுள்ளார்.
பின்னர் பிற்பகல் 3:30 மணிக்கு கோவையில் இருந்து சேலம் புறப்பட்ட அவர் சேலம் சங்ககிரியை நெருங்கும் போது மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்த தனது பை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.
முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ள கபிலன் தனது பையில் கல்விச் சான்றிதழ் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை வைத்துள்ளார்.
இந்தப் பை காணாமல் போனதை அறிந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
ஆனால் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம் தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் செவ்வாயன்று காலை 10 மணிக்கு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
காட்டூர் காவல் நிலைய போலீசாரும் இந்த புகாரை ஏற்க மறுத்து சங்ககிரிக்கு சென்று புகார் அளிக்க கூறியுள்ளனர்.
இதனால் தனது கல்வித் தகுதி சான்றுகள் அனைத்தையும் இழந்து நின்ற கபிலன் விரக்தியில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்ததை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பேருந்தில் இதேபோன்று திருடுபோகும் சம்பவம் கோவை பகுதியில் அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து கோவை காவல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டது.
ஆணையரின் உத்தரவின் பேரில் கபிலனின் புகார் ஏற்கப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து பையை திருடிய நபர் யார் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.