ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! பேராசிரியர் ராஜ்மோகன் பகுதி-1
“இந்தியப் பொருளாதாரம்”
அரசின் தேவையில்லாத செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது பொருளாதாரம் பாதாளத்திற்குப் போய்க் கொண்டி ருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதி
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறை சிறிதுமின்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையுமின்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்க முடிவு செய்தது.
கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளாகத் தமிழகத்திற்கான காவிரி நீர் அநியாயமாக மறுக்கப்பட்டு, நிலத்தடி நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் வானம் பார்த்த பூமியாகக் காவிரிப் படுகைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது. தனது வஞ்சகமான போக்கால் காவிரி உரிமையை நமக்கு மறுக்கும் இந்திய அரசு, நிலத்தடி நீருக்கும் மொத்தமாக வேட்டு வைக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாகப் பிரித்து மீத்தேன் எடுக்க மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவை:
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் (Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும், அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
நிலத்தை தோண்ட உரிமை வழங்கி மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 04.01.2011 அன்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்கள் திருவாருர் மாவட்டத்தின் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்கள் . மொத்த நிலப்பரப்பு : 691 சதுர கிலோமீட்டர்கள். இதில் 24 ச.கிமீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 667 ச.கி.மீ (166,210 ஏக்கர்கள்) மீத்தேன் எடுக்க தரப்பட்டுள்ளன. மொத்தம் 50 கிணறுகள் அமைக்கப்பட இருந்த ஊர்களின் விவரங்கள். கும்பகோணம் வட்டம்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி ,விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில்.
திருவிடைமருதூர் வட்டம். மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை.
ஒரத்தநாடு வட்டம் : குலமங்கலம்.
குடவாசல் வட்டம் : சித்தாடி, குடவாசல், மேலைப் பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர்.
வலங்கைமான் வட்டம் : சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கோயில் வெண்ணி, ஆதனூர், கண்டியூர்
நீடாமங்கலம் வட்டம் பூவனூர், கீழவாந்தச்சேரி (தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல், காளாச்சேரி.
மன்னார்குடி வட்டம்: கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு.
மீத்தேன் திட்டத்தால் நீர் வெளியேற்றப்படும்:
பாண்டிச்சேரி அருகே பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை, காவிரிப் படுகையில் நிலத்துக்கடியில் 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை வளமான நிலக்கரிப் படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை, நிலக்கரிப் படிமத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, ’நீரியல் விரிசல்’ (Hydraulic fracturing) என்னும் முறையில் எடுப்பது தான் மீத்தேன் எடுக்கும் திட்டம்.
தஞ்சை, கும்பகோணம் , மன்னர்குடி பகுதிகளில் உள்ள நீர் நஞ்சாக மாறும்…
நிலத்துக்கடியில் 2000 அடிவரை துளையிட்டு, குழாய் இறக்கி, அதிலிருந்து பக்கவாட்டில் அனைத்துத் திசை களிலும் இரண்டு கி.மீ. வரை குழாய்களைச் செலுத்தி, நிலக்கரிப் பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கியிருக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும். நிலக்கரிப் படிமத்தை நொறுக்க, நீரோடு மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு அபாயகரமான (BTEX) கலவை மிக அழுத்தத்துடன் உட்செலுத்தப்படும். கலவை நீரைக் கொண்டு விரிசல் ஏற்படுத்தும் இந்த ‘நீரியல் விரிசல்’ முறையில் உட்செலுத்தப்படும்.
இந்த வேதிக்கலவையில் (ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்டி-ஹைடு மற்றும் பென்சீன், புற்றுநோய் தாக்கும் கார்சினோஜன் பொருட்கள், இன்னும் பெயர் வெளியிடப்படாத பல வேதிப் பொருட்கள்) 30% மட்டுமே மீண்டும் வெளியே எடுக்கப்படும்.
மீதி 70% நச்சுக் கலவையும் வளமான வேளாண் பகுதியில் நிலத்துக்கடியில் தங்கிவிடும். இது நிலத்தை மட்டுமல்ல, நிலத்துக்கடியில் உள்ள நீர் முழுவதையும் நச்சாக மாற்றிவிடும்.
இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும்.
(நாளை தொடரும்)