தருமபுரம்:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது.
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடக்கிறது. விழாவின்போது தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து, மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் அவரை தங்கள் தோளில் தூக்கி செல்வார்கள். அப்போது பக்தர்களுக்கு ஆதீனம் ஆசி வழங்குவார். 500 ஆண்டுகாலமாக இந்த விழா நடந்து வருகிறது.
இதற்கிடையே மனிதனை, மனிதன் பல்லக்கில் தூக்கிச்செல்வதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. விழாவில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ஆம் தேதி மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு தடை விதிப்பதா? என்று எதிர்ப்புகுரல் கிளம்பியது.
இதையடுத்து, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தின் பட்டின பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தர விட்டார்.
இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது.