மதுரை:
வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது என்று கூறிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகஅரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பென்சிங் என்பவர் மணல்குவாரிகள், சட்ட விரோதமாக குவாரி அமைத்து பாறைகளை உடைத்து விற்பனை செய்வது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, இயற்கை நமக்கு வழங்கிய இயற்கை வளங்களை அழித்தால், வருங்காலம் நம்மை மன்னிக்காது என்றனர். மேலும் கன்னியாகுமரி பாறை உடைத்து விற்பனை செய்யும் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
தொடர்ந்து, தமிழகத்தின் மணல், எம்.சாண்ட் தேவை தொடர்பாக 10 கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவற்றுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு எவ்வளவு ஆற்று மணல், எம்.சாண்ட் தேவை என்பதே தெரியவில்லை. இதன் காரணமாகவே இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, தமிழகத்தின் மணல், எம்.சாண்ட் தேவை தொடர்பாக கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு கன்னியாகுமரி ஆட்சியர் பதில் அளிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எவ்வளவு ஆற்று மணல் மற்றும் எம்.சாண்ட் தேவைப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது
எம்.சாண்ட் எவ்வளவு உற்பத்தி செய்ய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு மணல், எம்.சாண்ட் கடத்தப்படுகிறதா? அவ்வாறு இருப்பின் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
எம்.சாண்ட் மற்றும் மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றின் தற்போதைய நிலை என்ன?
கடந்த 5 ஆண்டுகளில் எம்.சாண்ட் மற்றும் மணல் குவாரிகளால் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?
எம்.சாண்ட் மற்றும் மணலை இறக்குமதி செய்ய தனியாருக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? அவ்வாறு இறக்குமதி செய்வோருக்கு ஏன் வரிச் சலுகை வழங்கக்கூடாது?
தனியார் துறைக்கு எவ்வளவு மணல் மற்றும் எம்.சாண்ட் தேவை உள்ளது?
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எவ்வளவு மணல் மற்றும் எம்.சாண்ட் தேவை உள்ளது?
எம்.சாண்ட் யாரிக்க தமிழகத்தில் எத்தனை மலைகள் மற்றும் குன்றுகளில்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?
இந்த கேள்விகளுக்கு 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.