உலகின் பல பகுதிகளிலும் பல துறைகளில் தமிழர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர், மதுரை தமிழரான 51 வயது கருப்பையா முத்துமணி. சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு உலகிலேயே முதன் முதன்லாக தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துவர் இவர். இவரை இன்று மருத்துவ உலகமே கொண்டாடுகிறது. இளம் ஆராய்ச்சியாளருக்கான அமெரிக்க விருதை 2002ம் ஆண்டிலேயே பெற்றவர் இவர்.
சென்னைக்கு வந்திருக்கும் கருப்பையா முத்துமணியை சந்தித்தோம்.
இதோ அவர் நமக்களித்த பேட்டி..
உங்களது குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்…
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தான் நான் பிறந்த ஊர். ஏழ்மையான குடும்பம்ய எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிநான்தான். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றேன். இப்போது அமெரிக்காவில் ‘தி விஸ்டர் இன்ஸ்டிடியூட்’ என்ற மருத்துவ ஆராய்ச்சி கல்வி மையத்தின் தடுப்பு மருந்து மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்”
வைரஸ்.. நோய்கள்.. தடுப்பு மருந்து இவை பற்றி எளிமையாக விளக்க முடியுமா..
நிச்சயமாக..! உலகில் புதிது புதிதாக வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான் எனது வேலை. குறிப்பிட்ட ஒரு நோயை அமெரிக்காவில் ஒரு வைரஸ் ஏற்படுத்துகிறது என்றால், இந்தியாவில் அதே நோயை இன்னொரு வைரஸ் ஏற்படுத்தும். இப்படி நாட்டுக்கு நாடு வைரஸ்கள் மாறுபடும்
இந்த வைரஸ்களுக்கு தனித்தனியாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இயலாது. ஒரு நோய்க்கான அனைத்து வைரஸ்களுக்கும் சேர்த்து ஒரே தடுப்பு மருந்தைதான் கண்டுபிடிக்கவே முடியும்.
வைரஸூக்கு மனிதனைவிட புத்திசாலித்தனம் அதிகம். கால சூழலுக்கு ஏற்மாதிரி, அது தன்னை மாற்றிக் கொள்ளும். அதாவது, ஒருவரின் உடலில் செல்லும் போது அந்த உடலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை வைரஸூக்கு உண்டு.
வைரஸ்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல், வைரஸ்கள் நம்முடைய உடலில் சென்றால் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்கிறேன்” என்ற முத்துமணி, சிக்கன் குனியா பற்றி அடுத்து பேசினார்:
சிக்குன்குனியா பற்றியும், தடுப்பு மருந்து குறித்தும் நீங்கள்தான் முதலில் ஆராய்ச்சியில் இறங்கினீர்கள். அது குறித்து
“சிக்குன்குனியா என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். நான்கூட 2006-ம் ஆண்டில்தான் சிக்குன்குனியா என்ற வார்த்தையை முதன் முதலில் கேள்விப்பட்டேன். இது என்ன மாதிரியான வைரஸ் என்பதை முதலில் தெரிந்துகொண்டேன். பிறகு, அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக நானும், எனது தலைமையில் இயங்கும் குழுவினரும் ஆராய்ச்சிகளில் இறங்கினோம்.
இதன் விளைவாக, உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா நோயை தடுப்பதற்கான மருந்தை 2009-ம் ஆண்டில் கண்டுபிடித்தோம்.
அதேபோல, சிக்குன்குனியா வந்துவிட்டால், அதை குணப்படுத்துவதற்கான மருந்தை 2013-ம் ஆண்டில் கண்டுபிடித்தோம். முயல், எலி, குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு மருந்து சோதனைகள் அனைத்தும் வெற்றியடைந்தன. இந்த தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையை எங்கள் ஆராய்ச்சி நிறுவனம் வாங்கியது.
ஆனால் இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், எனது இந்த கண்டுபிடிப்பை பல நிறுவனங்களுக்கு விளக்கினேன். ஆனால் அவர்கள் யாரும் மருத்துவப் பரிசோதனை செய்து தடுப்பு மருந்துகளை தயாரிக்க தயாராக இல்லை.
கடைசியாக அமெரிக்காவில் உள்ள நிறுவனம் மட்டும் சிக்குன்குனியா தடுப்பு மருந்துகளுக்கான உரிமையை வாங்கியது” என்றார் முத்துமணி.
உலகை அச்சுறுத்திய மெர்ஸ் வைரஸூக்கும் நீங்கள்தான் முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்தீர்கள்…
ஆமாம்.. சவுதி அரேபியாவில் 2012-ம் ஆண்டில் மெர்ஸ் வைரஸ் வேகமாக பரவியது. 2002வது வருடம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸுக்கும், மெர்ஸ் வைரஸுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. மெர்ஸ் வைரஸால் சவுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் பலியானார்கள். ஆனாலும், ஏனோ அங்கு அது எந்தவித பதட்டத்தையோ குறைந்தபட்சம் எச்சரிக்கை உணர்வையோ கூட ஏற்படுத்தவில்லை.
மெர்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் வேலை விஷயமாக சவுதியில் இருந்து கொரியாவுக்கு செல்ல… அவர் மூலம் ஒரே வாரத்தில் 900 பேரு மெர்ஸ் வைரஸால் பாதிப்பு ஏற்பட்டது. இருமல், தும்மல் மூலம் பரவிய இந்த இந்த வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டனர். சிலர் நுரையீரல் பாதிப்படைந்து 5, 6 நாட்களில் உயிரிழக்கத் தொடங்கினர். அப்போதுதான், மெர்ஸ் வைரஸை கண்டு மக்கள் அஞ்ச ஆரம்பித்தார்கள். . 2013-ம் ஆண்டில் இந்த மெர்ஸ் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருந்தது.
மெர்ஸ் வைரஸூக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது பற்றி..
சொல்கிறேன். மெர்ஸ் வைரஸைப் பற்றி கேள்விப்பட்ட ஆறு மாதத்திலேயே அதை தடுப்பதற்கான மருந்தை எனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்தேன். மெர்ஸ் வைரஸுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து அதுதான். என்னைப் போலவே அரசு மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த நிறைய ஆராய்ச்சியாளர்களும் மெர்ஸ் வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தனர். அத்தனு பேரின் ஆராய்ச்சி கட்டுரைகளும் அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியானது.
அதில் அமெரிக்க ராணுவத்துக்கு எனது கண்டுபிடிப்புதான் சிறந்ததாக பட்டது. அவர்கள் எனது கண்டுபிடிப்பை தேர்வு செய்து மருத்துவ பரிசோதனையில் ஈடுபடத் தொடங்கினர். மனிதருக்கும் கொடுத்து பரிசோதித்துவிட்டனர். அமெரிக்க ராணுவத்தினர் எப்போதுமே நோய் வரும்முன் தடுப்பதையே விரும்புவார்கள். அதனால்தான் மெர்ஸ் வைரஸுக்கான எனது தடுப்பு மருந்தை அவர்கள் தேர்வு செய்தார்கள்.
தற்போது உங்கள் ஆராய்ச்சி…
தற்போது மெர்ஸ் வைரஸால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் எங்கள் குழு ஈடுபட்டு வருகிறது.
ஜிகா வைரஸும் அச்சுறுத்தி வருகிறதே..
ஆம்.. இதுவும் ஆபத்தானதுதான். இதை டெங்குவின் சகோதரி என்றுகூட அழைக்கலாம். ஏனென்றால் டெங்குவும், ஜிகா வைரஸும் ஒரே மாதிரியான அறிகுறிகள் கொண்டவை. ஆனால், ஜிகா வைரஸால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும்போது, அவர்களது கருவில் இருக்கும் குழந்தையின் மூளையும் பாதிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில், ஜிகா வைரஸால் கருவில் இருந்த குழந்தையின் மூளை பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதனால்தான் ஜிகா வைரஸை கண்டு மக்கள் அஞ்சத் தொடங்கினர்.
இந்த ஜிகா வைரஸ், 1947-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. பிறகு 1960-ம் ஆண்டிலும், 2015-ம் ஆண்டிலும் ஜிகா வைரஸ் பரவியது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்துள்ளது. ஆனால், யாருக்கும் தெரியவில்லை. ஆரம்பத்தில் வலிமை குறைந்ததாக இருந்த ஜிகா வைரஸ், தற்போது வலிமையானதாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.
இந்த ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது?
ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டால், அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய எப்போது ஆராய்ச்சியை துவங்கினீர்கள்..
ஜிகா வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியை 2015-ம் ஆண்டு டிசம்பரில் எனது குழுவினருடன் ஆரம்பித்தேன். மூன்று மாதங்களிலேயே ஜிகா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தோம். தனியார் நிறுவனம் ஒன்று, ஜிகா வைரஸ் தடுப்பு மருந்துக்கான உரிமத்தை எங்களிடமிருந்து பெற்றது. மனிதர்களுக்கு கொடுப்பது உட்பட ஏராளமான பரிசோதனைகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. அந்தப் பணிகள் எல்லாம் நிறைவுபெற்று, தற்போது ஜிகா வைரஸ் தடுப்பு மருந்தை அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
தற்போது சிங்கப்பூரில் ஜிகா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதே..
ஆமாம். அதே போல, தென் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிகா வைரஸ் தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்கின்றனர். ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
அமெரிக்காவில் உங்களுக்கு, உங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் குறித்து சொல்லுங்களேன்..
சொல்கிறேன். அமெரிக்காவில் ஒரு சட்ட நடைமுறை உண்டு. அதாவது, அந்நாட்டு அரசு நிறுவனமான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி கொடுத்தால்தான் எந்த நோய்க்கும் எந்த ஒரு நிறுவனமும் மருந்துகளை தயாரிக்க முடியும். என்னுடைய கண்டுபிடிப்பான மெர்ஸ் வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க ராணுவம் எஃப்டிஏ-விடம் அனுமதி பெற்று மருத்துவ சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. ஜிகா வைரஸ் தடுப்பு மருந்துக்கான உரிமம் பெற்ற தனியார் நிறுவனம், எஃப்டிஏ-வின் அனுமதி பெற்று மருந்தை தயாரித்து வருகிறது. எத்தனையோ ஆண்டுகள் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தைத்தான் முதல்முறையாக எஃப்டிஏ தேர்வு செய்து அனுமதி அளித்துள்ளது.
பலவித நோய்களை மூலிகைகள் மூலம் குணப்படுத்தும் சித்த வைத்தியம் குறித்து உங்கள் கருத்து என்ன
நமது பாரம்பரிய மூலிகைகளில் மிக அற்புதமான சக்திகள் உள்ளன. மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி, அம்மைக்கு வேப்பிலை என்று நிறைய மெடிக்கல் பிளாண்ட்ஸ் இங்கே உண்டு. இவற்றை முறையாக ஆராய்ச்சி செய்ய பெரும் நிதி தேவைப்படும். அதை பெரும் நிறுவனங்கள் செய்ய முன் வந்தால் நான் நமது மூலிகைகள் மூலம் நோய்த்தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சி செய்ய தயார்.