சென்னை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நலிவடைந்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தனது ஒருமாத ஊதியத்தை நீதிபதி சுப்பிரமணியம் நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வகையான தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. மக்கள் கூடுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் மட்டுமின்றி சிறுகுறு தொழில்முனைவோர், வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள்  வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது ஒரு மாத சம்பளமான  2.25 லட்சம் ரூபாயை,   கொரோனா காரணமாக சென்னையில் வருவாயை இழந்த அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் நலனுக்காக நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

இந்த தொகையை இன்று தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.