சென்னை: ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும், ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (ஜன.22) நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவானது, ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.ரவி, தலைமையில் நடைபெற்றது. இதில், 950 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். மேலும், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை உரையாற்றினார்.
இந்த பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், அவர் பங்கேற்பரா என்ற எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என். ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் பரப்புவதுடன் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்றும் ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]