சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி. அவையில், உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார், அவர் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநருக்கு உரிய மரியாதைகள் செய்ப்பட்டு, அவர் அவைக்குள் சபாநாயகரால் வரவேற்று அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைள் தொடங்கின. ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதம, அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கியதுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஜனநாயக முறைப்படி ஆளுநரை அழைத்து தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் கூட்டினார். ஆனால், ஆளுநர், அங்கு அரசின் உரையை வாசிக்காமல் தனது சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார்.
தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் நடத்துகின்றனர், இவை எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. தென் மாநில ஆளுநர்களின் நிலைப்பாடு ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவே உள்ளது என்று சாடியதுடன், தமிழ்நாடு வளர்ச்சியை ஏற்க ஆளுநர் மறுக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசியவர், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் உரையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தால் தந்திருப்போம் என்றும் அவர் கூறியவர், இந்த உரை மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்றால் முதலிலேயே ஆளுநர் சொல்லி இருக்க வேண்டும்.
ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். 2 நிமிடம் காத்திருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் சென்றிருக்கலாம். ஒன்றிய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அவமரியாதை செய்கின்றனர், ஆளுநர் ஆளுநர் ரிமோட் மூலம் இயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, ஆளுநர் உரை விவகாரத்துக்கு, ஆளுநர் நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் ரகுபதி கேள்வி கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என்றார்.