சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்த குழந்தைகளில் கல்வி செலவை அரசே ஏற்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார்.
சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும், ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து பதிலளித்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இன்று சட்டப்பேரவை கூடியதும், அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமளி நிலவியது. இதையடுத்து, அவைக்காவலர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது பேசினார். அப்போது, கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அங்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பாதிக்கப்பட்வர்கள் பலர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் கூறுவதுபோல, அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை கிடையாது, அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என்றார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாராயம் குடித்து பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றவர், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும். என்றவர், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும் என்றார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். * எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சியில் விஷ சாராய உயிரிழப்புகள் நடந்த போது உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறியதுடன், அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதை மக்கள் மறந்துவிடவில்லை, அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவத்தின் போது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்வி வரும் என்பதற்காக அதிமுகவினர் திட்டமிட்டே அவை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டனர் என்று குற்றம் சுமத்தினர்.
மேலும், முதலமைச்சர் என்கிற முறையில் கள்ளக்குறிச்சி பிரச்னையில் பொறுப்போடு பதில் அளித்து கொண்டு இருக்கிறேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன், கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது. விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
முன்னதாக, இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எழுந்து நின்றபடி பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்? என்று யாருக்கும் கேட்கவில்லை. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அனைவரும் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் கூறியதை ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்து சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் சட்டசபைக்குள் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்தபடி எழும்ப மறுத்து கோஷமிட்டபடியே இருந்தார். இதனால் சுமார் 10 சபை காவலர்கள் ஒன்றாக சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி அவரை வெளியேற்றினார்கள். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், சபை காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்ட போது சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் இல்லை. அதன் பிறகு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பற்றி விளக்கி பேசும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. சபாநாயகரின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்துள்ளது. இதனை தொடர்ந்து பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, , மக்கள் பிரச்சினை குறித்து அவையில் விவாதிக்க மறுக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது இருப்பது திறமையற்ற அரசாங்கம். இந்த திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளச்சாரம் அருந்தி பலர் உயிரிழந்து வருகின்றனர். மக்கள் நடமாடும் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதுபோல கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதி மருந்துகள் மருத்துவமனையில் இல்லை. அதை நாங்களே நேரடியாகவே கண்டோம் என்றவர், கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி வில வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், இதுகுறித்து அவையில் பேசய வலியுறுத்திய எங்களை பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார். சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது அதுபோல, எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆவேசமாக கூறினார்.