சென்னை:
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் உள்gl  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு கடித​​ம் எழுதி உள்ளனர்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அதில் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு  திமுக தலைமை யிலான கூட்டணி கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று விவாதிக்கிறார்.
இந்த நிலையில்,  தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை-2020’-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் – செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் – அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைத்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்த கடிதத்தில், “பொருள்: மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் “தேசிய கல்விக் கொள்கை-2020”-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க – செயல்படுத்திட மறுக்க – அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை – தொடர்பாக.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் எதிராகவும் – தமிழ்நாட்டில் பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித்திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ள “தேசிய கல்விக் கொள்கை-2020″க்கு அனைத்துக் கட்சிகளும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா பேரிடர் இந்திய மக்களை வாட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தேசத்தின் இறுக்கமான இந்த வேளையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதில் இருந்தே, அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். 2016-ல் தொடங்கி – திரு. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு, திரு. கஸ்தூரிரங்கன் குழு, என்றெல்லாம் அமைத்து – உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை, கல்வியில் மதச்சாயம் பூசி – வணிகமயப்படுத்தி – சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளித்து – கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந்திருக்கிறது.

66 பக்கங்கள் கொண்ட “தேசிய கல்விக் கொள்கை 2020”-ன் முகவுரையின் பக்கம் 5-ல் “கற்பித்தலிலும், கற்பதிலும் பன்மொழியையும், மொழித் திறனையும் ஊக்குவிப்பதுதான் கல்விக் கொள்கையின் அடிப்படைத் தத்துவம்” (Promoting multilingualism and the power of language in teaching and learning) என்று கூறியிருப்பதற்கு மாறாக, மீதியுள்ள அனைத்துப் பக்கங்களிலும் நம் தமிழ்மொழிக்கு எதிரான எண்ணவோட்டமே பிரதிபலிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உதாரணமாக:-

1. பாரா 4.11-ல், “எங்கெல்லாம் முடிகிறதோ” (Wherever possible) ஐந்தாம் வகுப்பு வரையாவது பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும்” என்பதும், “முடிந்தால் 8-ஆம் வகுப்பு வரையிலும் தொடரலாம்” என்பதும் மத்திய அரசுக்கு மும்மொழித்திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது.

2. அதே பாராவில், “ஒரு மொழியைக் கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் அந்த மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதில்லை” என்று கூறுவதிலிருந்து, எப்பாடு பட்டாவாது இந்தி மொழியை தமிழகத்தில் திணித்து விட வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்படுவதாகவே தெரிகிறது.

3. “மூன்று மொழித்திட்டத்தை நிறைவேற்ற மற்ற மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்” என்று பாரா 4.12-ல் அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

4. பாரா 4.13-ல், “மூன்று மொழித்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது,

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு – அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை தமிழ்மொழிப்பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு – நடைமுறையில் உள்ள 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.

5. பாரா 4.17-ல், “பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் – அறிவைப் பெற மிக முக்கியமானதாகக் கருதி – சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக சமஸ்கிருதத்திற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” (Sanskrit will thus be offered at all levels of School and higher education as an important enriching options for students, including as an option in the three language formula) என்பது, இருமொழிக் கொள்கையை அடியோடு புறக்கணித்து – சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் திணிக்கும் பகிரங்க முயற்சியாகும்.

6. ஆனால் தமிழக மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் – அடுத்த பாரா 4.18-ல், “தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும்” (Tamil literature must be preserved… As India becomes a fully developed country, the next generation will want to partake in and be enriched) என்று கூறியிருப்பது தமிழ்மொழியை – தமிழர்களை – ஏன், தமிழ்நாட்டையே நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் அடாவடிச் செயல்.

செம்மொழியாம் தமிழ்மொழியை, தேசிய கல்விக் கொள்கையில் இவ்வாறு சிறுமைப்படுத்தி – சமஸ்கிருதத்தைத் திணித்திடும் உள்நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் கல்வி முறையைச் சிதைத்து பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. அதில் மேலும் தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அவற்றுள்:

1. கல்வியில் வேதக் கலாச்சாரத்தைத் திணிப்பது,

2. இடஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூகநீதியைப் புறக்கணிப்பது,

3. பெண் கல்வி குறித்து கவலைப்படாது – பெண்ணுரிமையைக் காவு கொடுத்திருப்பது,

4. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது,

5. தொழில் கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தோல்வி கண்ட குலக் கல்வியை மீண்டும் அமல்படுத்துவது,

6. மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது,

7. மாநில அளவில் 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு,

8. 10+2 என்று இருக்கின்ற வெற்றிகரமான ‘பிளஸ் டூ’ கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது,

9. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு,

10. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் விதத்திலும் – மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது,

11. தன்னாட்சியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; ஆகியவற்றை இப்போது அலட்சியப்படுத்தினால், எதிர்காலத் தமிழ்ச் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து விடும்.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் – இந்த, “தேசிய கல்விக் கொள்கை-2020′ தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வரும் கல்வி முறைக்குச் சற்றும் பொருந்தாத – நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி – சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமான மும்மொழித்திட்டத்தைத் திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆகவே, தமிழக மக்களின் நலனுக்கும் – மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான – வருங்காலத் தலைமுறைக்கும் – பண்பட்ட நமது பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த, “தேசிய கல்விக் கொள்கை-2020”-ஐ தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மாணவர் சமுதாயத்தை – காவிமயக் கல்வியின் பக்கமும், பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பும் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையும் – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து; அதுதொடர்பாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் , தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சார்பில் அனுப்பட்டுள்ளது.