தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, நடந்த வன்முறைக்கு காரணம் சில சமூக விரோதிகள் தான். ஜெயலலிதா கடும் நடவடிக்கைகள் மூலம் அவர்களை அடக்கி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு அதை செய்ய தவறிவிட்டது என்று ரஜினிகாந்த் தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, நடந்த வன்முறைக்கு காரணம் சில சமூக விரோதிகள் தான். சமூக விரோதிகள் மற்றும் விஷக்கிருமிகள் சிலர் போராட்டத்தில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இதுபோன்ற சமூக விரோதிகளை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு அதை செய்ய தவறிவிட்டது.

போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்துக்குள் புகுந்துவிடாத அளவிற்கு மக்கள் கவனமாக போராட வேண்டும்/ இனிமேல் இத்தகைய நிகழ்வு நடைபெற கூறாது. சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்டெர்லைட்  நீதிமன்றம் சென்றால் அது மனித தன்மையற்ற செயல் என்ற ரஜினி,  தனி நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் வருகையையொட்டி தூத்துக்குடியில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலுக்கு வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சியின் பெயர் ஏதும் இன்னும் அறிவிக்காத நிலையில், இன்று முதன்முறையாக தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.