நாகை:

கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர்.

சீர்காழி அருகேயுள்ள எடமணல், வடகால், ஆமைப்பள்ளம், வருஷபத்து உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 87 தொழிலாளர்கள், கடந்த 6 மாதங்களாக கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கால் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்த அத்தொழிலாளர்கள் தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்செவியில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையறிந்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நாகை மாவட்ட ஆட்சியர் மூலம் சொந்த ஊர் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டார். இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியைத் தொடர்பு கொண்டு தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், அத்தொழிலாளர்கள் 3 கேரள மாநில பேருந்துகள் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேளரத்தில் வறுமையில் சிக்கித் தவித்த தங்களை மீட்க நடவடிக்கை எடுத்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி மற்றும் தமிழக, கேரள அரசுகளுக்கு மீட்கப்பட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.