புதுச்சேரி:

பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதைத்தான்  புதுவை மாநில  அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி மாநில  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமை தொடங்கி வைத்து பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, தற்காலங்களில் பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்து வருகின்றனர். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப் பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதாக தெரிவித்த முதல்வர், இதன் காரணமாகவே புதுவையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுவை மாநில அரசின் முதல் குறிக்கோளே, பெண்களையும், பெண் குழந்தை களையும் பாதுகாப்பதுதான் என்றும், அதைத்தான புதுவை அரசு தனது முதல் கடமையாக கொண்டு, அதற்காக பல்வேறு திட்டங்களையும்  செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

வட மாநிலங்களில் இன்னும் பெண்கள் சுதந்திரத்தை பார்க்க முடியாத அளவில் தான் இருப்பதாக கூறியவர்,  இன்னும் பல இடங்களில்  கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறும் பழக்கம் தொடர்வதாகவும் தெரிவித்தார்.இதுபோன்ற நிகழ்வுகளை  ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும் என்றார்.

புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாகவும், சுதந்திரமாக வும் உள்ளனர் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.