திருமலை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, வரும் 27ந்தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 300 பேருந்துகள் மலைப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில், திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்து 27ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதியளித்துள்ளார்.

இதையொட்டி, மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பஸ்  திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு மெகா என்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 36 இருக்கைகள், குளிர்சாதன வசதி. கண்காணிப்பு கேமரா தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை இந்த பஸ் இயக்க முடியும்‌. வருகிற 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வரவுள்ளன. உயர்-பவர் ஏசி & டிசி சார்ஜிங் சிஸ்டம் பேட்டரியை 3-4 மணி நேரத்தில் முழுமையாக ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

மாசு அளவைக் குறைப்பதன் மூலம் திருமலை மலை நகரம் மற்றும் திருப்பதியின் புனிதத்தைப் பாதுகாக்க 100 புதிய மின்சார பேருந்துகளை வாங்க APSRTC திட்டமிட்டுள்ளது. திருமலையில் முதல் மின்சார பேருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது.ஆனால், பிரமோற்சவம் விழா தொடங்கப்படுவதால், முன்கூட்டியே 27ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த பேருந்துகள்  மின்சார இயக்கம் மற்றும் மின்சார பேருந்துகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், Olectra Greentech Ltd மற்றும் Evey Trans Pvt Ltd நிறுவனத்தில், மத்திய அரசின் FAME-II திட்டத்தின் கீழ்  100 மின்சார பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இ-பஸ்கள் 12 ஆண்டுகளுக்கு மொத்த செலவு ஒப்பந்தம்/செலவுகள் மாதிரி அடிப்படையில் வழங்கப்படும் மற்றும் ஒப்பந்தத்தின் மதிப்பு தோராயமாக 140 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய APSRTC துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான துவாரகா திருமலராவ் , 20 எலக்ட்ரிக் பேருந்துகளின் முதல் தொகுதி செப்டம்பர் இறுதியிலும் மீதமுள்ள பேருந்துகள் டிசம்பர் இறுதியிலும் கொடியசைத்து இயக்கப்படும்.

திருமலா-திருப்பதி  மலை மீது இயக்கப்படும் மின்சார பேருந்துகள், அலிபிரி டிப்போவில் நிறுத்த ஏபிஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு 14 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. மீதமுள்ளவை திருப்பதியில் இருந்து நெல்லூர், கடப்பா மற்றும் மதனப்பள்ளிக்கு இன்டர்சிட்டி பேருந்துகளாக இயக்கப்படும்.

இதையொட்டி,  திருப்பதியில் உள்ள அலிபிரி பேருந்து நிலையத்திற்கு முதல் மின்சார பேருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (11ந்தேதி) வந்தது. தற்போது அதற்கான பதிவுகள் மற்றும்  சோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.